
ஒவ்வொரு வருடமும் ஆளுநர் மாளிகையில் குடியரசு தின விழா மற்றும் சுதந்திர தின விழா போன்றவைகளின் போது தேநீர் விருந்து வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வழங்கப்பட்டது. இதில் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் திமுக, மதிமுக, விசிக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் உட்பட பல்வேறு கட்சிகள் புறக்கணித்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற தேநீர் விருந்து பாஜக, அதிமுக, தேமுதிக மற்றும் புதிய தமிழகம் கட்சிகள் கலந்து கொண்டது.
இந்த நிகழ்ச்சியின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் ஆளுநர் மாளிகைக்கு வந்த போது அண்ணாமலை மற்றும் எச். ராஜா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மிகவும் உற்சாகமாக அவர்களை வரவேற்றனர். அப்போது எச். ராஜா, ஜெயக்குமார் மற்றும் அண்ணாமலை ஆகியோர் கலகலப்பாக பேசி சிரித்தனர். மேலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இல்லை என்று கூறிவரும் நிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் அதிமுகவினரும் பாஜகவினரும் கலகலப்பாக பேசி சிரித்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி மீண்டும் கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.