
சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் நேற்று சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல்துறையினர் இச்சம்பவத்தை பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதுடன் 3 தனி படைகளை அமைத்து பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து ஆதரங்களை சேகரித்ததுடன் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவின் காட்சிகளையும் வைத்து ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
இதில் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசியது எடப்பாடி பகுதியை சேர்ந்த ஆதித்யா(20) என்பது தெரியவந்தது. பின் தலைமறைவாயிருந்த அவரை காவல்துறையினர் சுமார் 10 மணி நேர தேடலுக்குப் பின்பு அதிரடியாக கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் பேஸ்புக், யூடியூப் போன்றவற்றை பார்த்து தான் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் இவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் ரவுடிசம் செய்தால்தான் பிரபலமாக முடியும் என்ற எண்ணத்துடன் இதை செய்ததாக கூறினார். காவல்துறையினர் அவரிடம் இச்சம்பவத்தை பற்றி விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.