ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் மீண்டும் அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகி ஒருவர் போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது சமீபத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி எடப்பாடி பழனிச்சாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவை புறக்கணித்தார்.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய புகழேந்தி, இன்றைக்கு பதிலாக இன் டய க்கு என்றும், டிடிவி என்பதற்கு பதிலாக டிடி என்றும் பேசுகின்ற இந்த பழனிச்சாமியை புரட்சித்தலைவர் என்பதா? இதுதான் உதயகுமாரின் ஆராய்ச்சியா? எம்ஜிஆரும், அம்மா ஜெயலலிதாவும் இல்லாமல் இவர்கள் படங்களை தவிர்த்து அம்மா அவர்கள் வித்திட்ட அவிநாசி திட்டத்திற்கு சென்று பாராட்டு சூட்டி கொள்ளும்  பழனிச்சாமியை உதயகுமார் புகழ்வது எந்த விதத்தில் நியாயம். இப்படியே போனால் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் 26 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது. ஓபிஎஸ் பக்கத்தில் நாங்கள் இல்லை என்பதால் தேவையில்லாமல் பேசுவதை அனுமதிக்க முடியாது. இரட்டை இலை வழக்கில் தோற்று விட்டதால் பழனிச்சாமி பயந்து நடுங்கி கொண்டிருக்கின்றார். ஒற்றுமைக்கு சரிவராவிட்டால் நீங்கள் அனைவரும் முகவரியே இல்லாமல் போய்விடுவீர்கள் என்று பழனிச்சாமியை புகழேந்தி விமர்சித்துள்ளார்.