
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என்று தகவல் வெளிவந்ததால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு தரப்பும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தனித்தனியாக சந்தித்து ஆதரவு கேட்டிருந்த நிலையில் ஓபிஎஸ் பாஜக போட்டியிட்டால் தாங்கள் ஆதரவு கொடுப்போம் என்றும் ஒருவேளை பாஜக போட்டியிடாவிட்டால் தங்களுக்கு ஆதரவு கொடுக்குமாறு அண்ணாமலையிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியன் உட்பட 3 பேர் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்துக்கு இன்று காலை புறப்பட்டு சென்றுள்ளனர்.
இவர்கள் அகமதாபாத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நடைபெறும் தமிழ் சங்க விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அதன் பிறகு குஜராத்தில் சில முக்கியமான தலைவர்களை சந்தித்து ஓபிஎஸ் பேச இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. பாஜகவை பொறுத்தவரை அனைத்து முக்கிய முடிவுகளையும் தலைமை தான் எடுக்கும் என்று கூறப்படுவதால் ஓபிஎஸ் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்து ஆதரவு கொடுக்குமாறு கேட்க இருப்பதாக புது தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஜேபி நட்டாவின் சந்திப்பு மற்றும் குஜராத்தின் பயணம் போன்றவைகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.