தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகன் அம்மை போட்டதால் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். கடந்த ஒன்பதாம் தேதி மகனுக்கு உணவு கொடுத்துவிட்டு பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த சிறுவன் தனது பாட்டியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பார்க்க வருமாறு அழைத்துள்ளார். அந்த பாட்டியும் பேரனை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

ஆனால் சிறுவன் வீட்டில் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பாட்டியும் உறவினர்களும் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. அடுத்த நாள் அதிகாலை பக்கத்து வீட்டு மாடியில் சிறுவன் சடலமாக கிடந்தான். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கில் மூன்று நாட்களாக குற்றவாளி பிடிபடாத நிலையில் எதிர் வீட்டைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். கருப்பசாமி ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்க்கிறார். போலீசார் விசாரணை நடத்தியதில் கருப்பசாமி சிறுவனை அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கைக்கு பலவந்தமாக உட்படுத்த முயற்சி செய்து கொன்றது தெரியவந்துள்ளது. சிறுவனின் ஆசனவாய் மற்றும் வாய் பகுதிகளில் காயங்கள் இருந்தது. கருப்பசாமியும் போலீசாருடன் இணைந்து குற்றவாளியை தேடுவது போல நாடகமாடியது குறிப்பிடத்தக்கதாகும்.