கோவையைச் சேர்ந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் (வயது 37) மீது இரு சிறுமிகள் பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையைச் சேர்ந்த இவர், கோவையில் காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள கிறிஸ்தவ சபையில் பணியாற்றி வந்தார்.

பாப் இசை நிகழ்ச்சிகள் மூலம் இளைஞர்களை ஈர்த்து வந்த ஜான் ஜெபராஜ், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு மே 21ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகளை தனியாக அழைத்துச் சென்று அவர் பாலியல் தொந்தரவு செய்ததாக தெரியவந்தது.

இந்த தகவலுக்கடுத்து கோவை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைது செய்ய போலீசார் ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள வீட்டுக்குச் சென்றபோதும், அவர் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அவர் பெங்களூருவில் பதுங்கியிருக்கலாம் என்ற ரகசிய தகவலின் அடிப்படையில், அந்த நகரத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அவரது சொந்த ஊரான நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களிலும் போலீசார் முகாமிட்டு தேடிவருகின்றனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் ஜான் ஜெபராஜ் பேசிய ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் தனது மனைவியிடம் என்ன நடந்தது என்று உனக்கும் தெரியும். சிறிய பிரச்சனையை வைத்து ஒருவர் நம்மிடம் விளையாண்டு விட்டார். உனக்கு ஒரு விஷயம் புரிய வேண்டும்.

இந்த மாதிரி பிரச்சினைகள் நடக்கிற போது எல்லா மனிதருக்கும் முதலில் தோன்றுவது தற்கொலை எண்ணம் தான். நான் நான்கு ஐந்து முறை தற்கொலைக்கும் முயன்றுள்ளேன். மூன்று மாதம் மன அழுத்தத்தில் இருந்தேன் சாப்பிடவில்லை. ஒன்பது கிலோ வரை குறைந்து விட்டேன்.

நான் தவறு செய்துவிட்டு அது செய்தேன் இது செய்தேன் எனக் கூறுகிறாய் என நினைக்கலாம். என்ன நடந்தது என்று நமக்கு தெரியும். நான் தவறு செய்திருந்தால் அதை கடவுள் பார்த்துக் கொள்வார். இந்த ஆடியோவுடன் கூடவே, அவர் வெளியிட்டுள்ள மற்ற ஆடியோக்களும் தற்போது பரவி வருவதால், அவற்றையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.