
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பகுதியை பரபரப்பாக மாற்றியுள்ளது. ரியல் எஸ்டேட் டீலராக பணியாற்றிய குல்தீப் தியாகி (46), திடீரென தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் நடந்த வேளையில் வீட்டில் இருந்த அவரது இரண்டு மகன்கள் துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்து, தங்கள் பெற்றோர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர்.
போலீசார் விசாரணை நடத்தும் போது, குல்தீப்பின் வீட்டில் அவர் எழுதிய கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில், “நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இது பற்றி என் குடும்பத்தினர் யாரும் அறியவில்லை.
நான் விரைவில் இறந்து விடுவேன் என்பதால் சிகிச்சைக்காக வீணாக பணம் செலவிடக்கூடாது. எனது மனைவியுடன் கடைசி வரை இருப்பேன் என சொன்னேன், எனவே அவரையும் என்னுடன் அழைத்துச் செல்கிறேன். இது எனது தனிப்பட்ட முடிவு” என எழுதியிருந்தது. இந்த உருக்கமான கடிதம் பலரின் மனதை துளைக்கச் செய்துள்ளது.
இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குல்தீப்பின் பயன்படுத்திய துப்பாக்கியையும், குற்றவியல் ஆதாரங்களையும் கைப்பற்றியுள்ளனர். இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.