
மரக்காணத்தில் ஒரு மாதமாக ரேஷன் பொருட்கள் வழங்காமல் அலைக்கழித்து வருவதாக கூறி நியாய விலை கடை பணியாளர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் உள்ள கரிப்பாளையம் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நியாயவிலை கடைகள் இயந்திர கோளாறு மற்றும் உணவு பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இம்மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மாதம் நிறைவு பெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிக்கல் நீடித்து வருவதாக குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரேஷன் கடை முன்பாக கூடி நின்று ரேஷன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.