நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஹட்டி பகுதியைச் சேர்ந்த முரளி (37) அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவர், தனது மனைவி விமலாராணி (28) மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். ஆனால், சில நாட்களாக கணவன்-மனைவிக்குள் தகராறு தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், சம்பவத்தன்று அதிகாலை முரளியின் வீட்டில் திடீரென அலறல் சத்தம் கேட்டது. அருகிலிருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது, முரளி தீப்பற்றி எரிந்த நிலையில் தவித்து கொண்டிருந்தார். உடனடியாக தீயை அணைத்து முதலுதவி அளித்த பொதுமக்கள், அவரை ஆம்புலன்ஸில் பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தீக்காயம் அதிகமாக இருந்ததால் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், தீவிரமாக உடல் பாதிக்கப்பட்டதால், முரளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த சில மாதங்களாக விமலாராணி தனது ஆண் நண்பர்களுடன் செல்போனில் அதிக நேரம் பேசுவதாக கூறப்படுகிறது. இதனால், கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு எழுந்ததோடு, சமீபத்தில் நடைபெற்ற வாக்குவாதம் கடுமையாக மாறியுள்ளது. முரளி, மனைவியைக் கண்டித்ததற்காக, விமலாராணிஒரு கொடூரமான முடிவை எடுத்துள்ளார். போலீசாரின் விசாரணையில், முரளியின் கண்களில் ஃபெவிகால் தடவியதுடன், பெயின்டிங் பணிக்காக வீட்டில் இருந்த தின்னர் திரவத்தை அவரது உடலில் ஊற்றி தீ வைத்தது உறுதியாகியுள்ளது. இது மிகவும் கொடூரமான கொலை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் விமலாராணி மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணையில், தனது குற்றத்தை விமலாராணி ஒப்புக்கொண்டதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பந்தலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று குழந்தைகள் தங்கள் தந்தையை இழந்ததோடு, தாயும் சிறையில் அடைக்கப்பட்டதால் ஆதரவின்றி தவித்து வருகின்றனர். குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்தக் கொடூர சம்பவம் அந்த பகுதியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.