உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் ஏற்பட்ட கொடூரமான கொலைச் சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலருடன் சேர்ந்து கணவரை 15 துண்டுகளாக வெட்டி, அந்த உடல் உறுப்புகளை சிமெண்ட் கலந்த ட்ரம்மில் புதைத்து வைத்ததாக முஸ்கான் ரஸ்தோகி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவரது காதலர் சஹில் ஷுக்ளா உடனே கைது செய்யப்பட்டு, இருவரும் தற்போது மீரட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கர சம்பவம்  சௌரப் ராஜ்புட் தனது மகளின் பிறந்த நாளுக்காக லண்டனில் இருந்து இந்தியா வந்தபோது நடந்தது.

இந்த சம்பவம் குறித்து மத போதகர் பாகேஸ்வர் பாபா (திரேந்திர கிருஷ்ண ஷாஸ்த்ரி) அளித்த கருத்து தற்போது சர்ச்சை ஆகியுள்ளது. அதாவது “இந்தியா முழுக்க இப்போது ப்ளூ டிரம் பிரபலமாகிவிட்டது; பல கணவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்” என அவர் நகைச்சுவையாக கூறினார். மேலும், “நன்றி பகவான், நான் கல்யாணம் செய்யவில்லை,” என்றும் சிரித்து கொண்டே கூறினார். அவர் இந்தக் கொலை சம்பவத்தை ‘பாரம்பரிய குடும்ப மதிப்பீடுகளின் வீழ்ச்சியின் விளைவாகக் கண்டார்.

மேலும், “மேற்கத்திய கலாச்சாரமும், ஒழுங்கற்ற திருமண பிணைப்புகளும் குடும்பங்களை அழிக்கின்றன. இந்த சம்பவம் ஒரு நாகரிக வளர்ச்சியின் பற்றாக்குறையைக் காட்டுகிறது. இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க, ஒவ்வொரு இந்திய குடும்பமும் ராம்சரித்மானஸின் போதனைகளை பின்பற்ற வேண்டும்,” எனக் கூறினார்.