
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளம் என்பது ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவர்கள் மத்தியிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தென்கொரியாவை சேர்ந்த வாலிபருடன் சமூக வலைதளத்தில் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த நட்பு காதலாக மாறிய நிலையில் அவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்துள்ளனர். அதாவது கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் விஜயலட்சுமி (28).
இவர் தென் கொரியாவை சேர்ந்த மின்ஜுன் கிம் (28) என்ற வாலிபரை காதலித்துள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் தென்கொரியாவில் இருந்து கரூருக்கு வந்து விஜயலட்சுமியின் பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளார். அவர்கள் திருமணத்திற்கு சம்மதித்த நிலையில் இருவீட்டார் முன்னிலையில் இந்து முறைப்படி அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் காதலுக்கு ஜாதி மதம் முக்கியம் இல்லை என்பதை தாண்டி தற்போது கண்டம் விட்டு கண்டம் தாண்டி ஒரு ஜோடி காதல் திருமணம் செய்து கொண்டது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.