ஐபிஎல் 2024 ஏலத்தில் தென்னாப்பிரிக்காவின் ஜெரால்ட் கோட்ஸியை மும்பை இந்தியன்ஸ் வாங்கும் என கணித்துள்ளார் அஸ்வின்..

ஐபிஎல் 2024 சீசனுக்கு முன்னதாக, அனைத்து உரிமையாளர்களும் வெளியிடப்பட்ட மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை நவம்பர் 26ஆம் தேதி அறிவித்தனர். அப்போது ஹர்திக் பாண்டியா தான் அதிகம் பேசப்பட்ட ஒருவராக இருந்தார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார். வீரர்களின் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடைபெறும். அனைத்து உரிமையாளர்களும் தங்களுக்கு பிடித்த வீரர்களை அவர்களின் தொகை இருப்புக்கு ஏற்ப வாங்க விரும்புகிறார்கள். இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவின் ஜெரால்ட் கோட்ஸியை மும்பை இந்தியன்ஸ் பெரிய அளவில் ஏலம் எடுக்கக்கூடும் என்று இந்திய கிரிக்கெட் வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரருமான ஆர் அஷ்வின் கணித்து கூறியுள்ளார்.

அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், “ஜெரால்ட் கோட்ஸி மும்பை இந்தியன்ஸ் வீரர் போல் இருக்கிறார். தங்கக் கோடுகள் கொண்ட நீல நிற ஜெர்சியில் வான்கடே ஸ்டேடியத்தில் பந்துவீசினால் பரபரப்பாக இருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு வீரர் கிடைக்கவில்லை என்றால் கண்டிப்பாக ஜெரால்டுக்கு செல்வார்கள் என்று நினைக்கிறன். மும்பை அவரை பெரிய அளவில் ஏலம் எடுக்கலாம். மிட்செல் ஸ்டார்க்கை மும்பை இந்தியன்ஸ் ஏலம் எடுக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்றார்.

மினி ஏலத்தில் ஸ்டார்க் மற்றும் ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் தேவைப்படுவார்கள் என்று அவர் கூறினார், ஆஷஸ் மற்றும் டி 20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு அவர்கள் போட்டியின் நடுப்பகுதியில் கூட வெளியேறலாம் என்று கூறினார்.

“மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகிய இருவர் மட்டுமே புதியவர்கள். ரச்சின் ரவீந்திரா, கோட்ஸி மற்றும் வேறு சில பெயர்கள் இருந்தாலும், அனைவரும் வாங்க விரும்பும் இரண்டு பெயர்கள் இவை என்பது உறுதியாகத் தெரிகிறது. டி 20 உலகக் கோப்பையைப் போலவே ஆஷஸ் வரப்போகிறது, மேலும் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் போட்டியிலிருந்து வெளியேறப் போவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன, அது அவர்களின் வரலாற்றில் உள்ளது” என்று கூறினார்.

ஜெரால்ட் கோட்ஸி உலகக் கோப்பையில் மொத்தம் 8 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அவர் அபாரமாக பந்துவீசி மொத்தம் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஜெரால்டு 5வது இடத்தில் உள்ளார். உலகக் கோப்பையில் அவர் சராசரி 20க்கும் குறைவாகவே இருந்தார். அவர் இதுவரை ஐபிஎல் விளையாடியதில்லை. அவர் தனது பெயரை ஏலத்தில் வைத்தால், சந்தேகத்திற்கு இடமின்றி பல உரிமையாளர்கள் அவரை ஏலம் எடுக்கலாம். மும்பை இந்தியன்ஸ் அவரை எடுக்க  விரும்பலாம் என அஸ்வின் நம்புகிறார்.

ஜெரால்ட் கோட்ஸி இதுவரை தென்னாப்பிரிக்காவுக்காக மொத்தம் 2 டெஸ்ட், 14 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அவர் முறையே 9, 31 மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவரை அவரால் எந்த வடிவத்திலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. ஒருநாள் போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.