
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் பாலிவுட்டில் சாவா திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை புரிந்து வருகிறது. நடிகை ராஷ்மிகா கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளியான க்ரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியால் அடுத்ததாக கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடிக்க நேஷனல் கிரஷ் என்று பாராட்டப்பட்டார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து சினிமாவில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவை புறக்கணிப்பதாக ஏற்கனவே அவர் மீது சர்ச்சை எழுந்தது.
இதற்கு கன்னட ரசிகர்கள் கடும் கண்டனங்களை கூட தெரிவித்தனர். பின்னர் ராஷ்மிகா இதற்கு விளக்கம் கொடுத்தார். இந்த நிலையில் கர்நாடகவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ரவிக்குமார் கவுடா ராஷ்மிகா மந்தனா கன்னடத்தை புறக்கணிப்பதாக பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்துள்ளார். அதோடு கர்நாடகா எங்கு இருக்கிறது என்று தனக்கு தெரியாது என ராஷ்மிகா கூறியதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, கன்னட மொழி திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் தன் வாழ்க்கையை ராஷ்மிகா தொடங்கினார்.
ஆனால் தற்போது அவர் கன்னடத்தை புறக்கணிக்கிறார். கடந்த வருடம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளுமாறு ராஷ்மிகாவை நாங்கள் அழைத்தோம். ஆனால் அவர் வருவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். அவர் என் வீடு ஹைதராபாத்தில் இருக்கிறது. எனக்கு கர்நாடகா எங்கு இருக்கிறது என்று தெரியாது. என்னால் வர முடியாது என்று கூறினார். மேலும் கன்னடத்தை புறக்கணித்த ராஷ்மிகாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டுமா என்று ஆவேசமாக பேசியுள்ளார் .