மதுரை மாவட்டம் தத்தனேரி பகுதியில் கருப்பையா மீனாட்சியம்மாள் தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் 14 சென்ட் நிலத்தை கடந்த 1973-ல் மாவட்ட நிர்வாகம் 19688 ரூபாய்க்கு வாங்கியது. ஆனால் கருப்பையா தனது நிலத்துக்கு கூடுதல் பணம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு சென்ட்க்கு 1000 வீதம் மொத்தமாக 2.14 லட்சம் வழங்க வேண்டும் என 1982ல் தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் பணத்தை கொடுக்காமல் அலைக்கழித்து வந்தது. இதனை தொடர்ந்து கடந்த 2009 ஆம் ஆண்டு கருப்பையா மாவட்ட நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று மாவட்ட ஆட்சியரின் காரை ஜப்தி செய்தார்.

அதன் பின் மாவட்ட நிர்வாகம் கருப்பையாவுக்கு ஒரு லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு மீதி பணம் விரைவில் தருவதாக உத்தரவாதம் கொடுத்து விட்டு காரை எடுத்துச் சென்றனர். மாவட்ட நிர்வாகம் 2010ல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது, ஆனால் அது தள்ளுபடி ஆனது. பணத்தை வழங்காத மாவட்ட நிர்வாகம் அளித்த உறுதி மொழியை நீதிமன்றம் ரத்து செய்து வாகனத்தை ஒப்படைக்க வேண்டும் என ஜனவரி 21 உத்தரவு பிறப்பித்தது. ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு உத்தரவையும் கடைப்பிடிக்காததால் மாவட்ட ஆட்சியரின் காரை ஜப்தி செய்வதற்காக கருப்பையாவின் வாரிசுதாரர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர் நேற்று ஆட்சியர் அலுவலகம் சென்றனர்.

அப்போது அங்கு நின்றிருந்த ஆட்சியரின் காரை ஜப்தி செய்வதற்காக காரின் சாவியை கேட்டனர். ஆனால் சாவி கொடுக்க மறுத்ததால் காரில் கயிறு கட்டி இழுத்துச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது அங்கு வந்த கோட்டாட்சியர் ஷாலினி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்  இழப்பீட்டுத் தொகையை விரைவில் வழங்குவதாக ஷாலினி தெரிவித்தார். அதனால் கருப்பையாவின் தரப்பினர் காரை ஜப்தி செய்யும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.