
தேனி மாவட்டம் வைகை ஆற்று ரயில்வே பாலம் அருகே உடல் சிதறிய நிலையில் ஒரு ஆணும் பெண்ணும் சடலமாக கிடந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. சடலமாக மீட்கப்பட்ட நபர் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மணிகண்டன். இவர் தனியார் பேருந்தில் டிரைவராக வேலை பார்க்கிறார். சடலமாக மீட்கப்பட்ட பெண் பொள்ளாச்சியை சேர்ந்த சம்யுக்தா. இவர் கோவையில் இருக்கும் கல்லூரியில் படித்து வந்தார். தினமும் சம்யுக்தா பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு மணிகண்டன் ஓட்டி சென்ற தனியார் பேருந்தில் சென்று வந்தார்.
அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. மணிகண்டன் தனக்கு திருமணமானதை மறைத்து சம்யுக்தாவுடன் பழகினார். இதனை அறிந்து சம்யுக்தாவின் பெற்றோர் மணிகண்டனை அழைத்து விசாரித்த போது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரியவந்தது. இதனால் காதலை கைவிடுமாறு சம்யுக்தாவை கண்டித்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணிகண்டனும் சம்யுக்தாவும் வீட்டை விட்டு வெளியேறி பல சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்தனர். சம்பவம் நடந்த அன்று வைகை ஆற்று பாலம் அருகே டூவீலரை நிறுத்திவிட்டு இருவரும் ரயில்வே தண்டவாளத்தில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி நின்றனர். அப்போது கோவையிலிருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.