கல்வியில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய அமைச்சருக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகின்றது. ரூ.2,158 கோடியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். 19 கோடி ரூபாய் செலவில் அனைத்து அரசு பள்ளி மாணவிகளுக்கும் தற்காப்பு குறித்து பயிற்றுவிக்கின்றோம். ஆனால் தற்போது நிதி பற்றாக்குறை காரணமாக அதனை தொடர முடியவில்லை. மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்துகின்றது. இந்த இரு மொழிக் கொள்கையால் தமிழகத்தில் என்ன தீங்கு ஏற்பட்டுள்ளது? இஸ்ரோவில் பணியாற்றக்கூடிய நாராயணன் உள்ளிட்ட பலரும் தமிழக அரசு பள்ளியில் பயின்றவர்கள் தான்.

இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் தமிழ் வழி பயின்ற மாணவர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்து வருகின்றனர். சிபிஎஸ்சி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தமிழ் கட்டாயம் என்று சட்டம் இயற்றியுள்ளோம். கடந்த வருடம் தமிழ் வழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டுள்ளது. தமிழ் சார்ந்த பல்வேறு திட்டங்களையும் கொண்டு வந்துள்ளோம். மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும் பள்ளி மாணவர்களின் நலனை கருதி தமிழ்நாடு தன்னுடைய சொந்த நிதியில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி வருகின்றது. கல்வியை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என்று அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார்.