கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 15 வயது சிறுவன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி அந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவரின் மகனுக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில் திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஜனவரி 31-ஆம் தேதி இரவு நேரம் அந்த மாணவர் மண்டபத்திற்கு சென்றார்.

அப்போது அந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்க்கும் உசேன் என்பவர் கழிப்பறையில் வைத்து மாணவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை அறிந்த சக மாணவர்கள் பாதிக்கப்பட்ட மாணவரை கேலி, கிண்டல் செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் உசேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.