புதுச்சேரியிலுள்ள ரெட்டியார் பாளையம் புது நகர் பகுதியில் பாக்கியலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 75 வயதுடைய செந்தாமரை என்ற மூதாட்டி இருந்துள்ளார். இதில் செந்தாமரை தனது வீட்டிலுள்ள கழிவறைக்கு சென்ற போது மயங்கி விழுந்துள்ளார். உடனே செந்தாமரையின் மகள் காமாட்சி தனது தாயை தூக்க சென்ற போது அவரும் மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து கழிவறைக்கு சென்ற 3 பேரும் மயங்கி விழுந்ததால் அதிர்ச்சியடைந்த பாக்கியலட்சுமி இருவரையும் தூக்க சென்ற போது அவரும் மயங்கி விழுந்துள்ளார். இச்சம்பவம் குறித்து புதுச்சேரி ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர்.

அதில் செந்தாமரை வீட்டின் கழிவறையிலிருந்து விஷ வாயு வெளியேறுவது தெரிய வந்தது. உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 3 பேரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே செந்தாமரை மற்றும் காமாட்சி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் பாக்கியலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கிடையே விஷ வாயு அப்பகுதி முழுவதுமே வேகமாக பரவ தொடங்கியது. அதில் பாலகிருஷ்ணன் மற்றும் செல்வராணி என்பவரும் மயங்கி விழுந்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வராணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதில் அடுத்தடுத்து விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.