
தேனி அருகே மதுராபுரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தேனி எங்களுக்கு எப்போதுமே ராசியான இடம். முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் வெற்றி பெற்ற இடம் மீண்டும் சரித்திரம் திரும்புகிறது என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் வெற்றியின் வெளிச்சம் தேனியில் தொடங்குவதால் இந்த கூட்டம் நடத்தப்படுகின்றது.
காக்கா உட்கார பனைமரம் விழுந்தது போல் ஓபிஎஸ்-க்கும் நாங்கள் கூட்டம் நடத்துவதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி பற்றி எடப்பாடி பழனிச்சாமி விரைவில் அறிவிப்பார். அரசியல் வியூகங்களை எல்லாம் வெளியில் சொல்ல முடியாது. ஓபிஎஸ் இணைப்பு பற்றி நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் கிடையாது. எல்லாவற்றிற்கும் எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்லிவிட்டார். மூன்று மொழிகளை படிப்பவர்கள் பற்றி எங்களுக்கு கவலையில்லை, படிப்பவர்களை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் மொழியை திணிப்பதை நாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.