
ஸ்ரீவில்லிபுத்தூர், கொத்தங்குளம் என்னும் பகுதியில் சமுத்திரக்கனி என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் வன்னியம்பட்டி அருகில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் தனது மகன் சக்திவேலுக்கு திருமணம் நடத்தினார். அச்சமயத்தில் திருமணத்திற்காக வந்திருந்தோர் அளித்த மொய்ப்பணம் ரூ.1.71 லட்சம் திடீரென காணாமல் போனது. இதனால் பதட்டம் அடைந்த திருமண வீட்டார் வன்னியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். இவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் திருமண மண்டபத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்புகளை சோதனை செய்தனர்.
அப்போது சிசிடிவியில் 2 பெண்கள் மொய் பணத்தை திருடி செல்வது பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் மொய்ப்பணம் திருடிய 2 பெண்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்கையில் உறவினர்கள் போல திருமணத்தில் கலந்து கொண்டு, சில்லறை வாங்குவது போல மொய்ப்பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது . இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்களிடம் இருந்து ரூ.1.71 லட்சம் பணத்தை கைப்பற்றினார். மேலும் அவர்கள் மதுரை மாவட்டம் அயன்கோவில்பட்டியை சேர்ந்த முத்து செல்வி, பாண்டியம்மாள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.