கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கெங்கேரி பகுதியில் குருமூர்த்தி திவ்யா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இதில் குருமூர்த்தி சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி திவ்யா வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததோடு வீட்டிலிருந்து தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது‌. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் வீட்டின் மேல் தளத்தில் வாடகைக்கு இருந்த இளம் பெண்ணை சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.

அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அந்த இளம் பெண்ணின் பெயர் மோனிகா (24). இவர் கோளார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் ரீல்ஸ் போடுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இவர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவரை வீடு பார்ப்பதற்கு முன் தன்னுடைய கணவர் என்று அவர்களிடம் கூறியுள்ளார். அவருடைய காதலன் எப்போதுவது வீட்டிற்கு வந்துவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் தன்னுடைய காதலனுடன் ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு அவர் பலரிடம் கடன் வாங்கியுள்ளார்.

கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்ப கேட்டு மோனிகாவுக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர்‌. அந்த நேரத்தில் தன்னுடைய காதலனுக்கு சரக்கு ஆட்டோ ஒன்று வாங்கிக் கொடுக்க திட்டமிட்டுள்ளார்‌. அப்போது வீட்டின் உரிமையாளர் ஆன திவ்யா தங்க நகைகள் அணிந்திருப்பதை அவர் பார்த்ததால் அதை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். இதனால் கடந்த 10-ம் தேதி வீட்டில் திவ்யா தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட மோனிகா அவரிடம் சென்று பேசுவது போல் நடித்து கழுத்தை நெரித்து அவரை கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவரிடம் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது‌. மேலும் இளம்பெண் மீது கொலை வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.