
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ராமர் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் ராமசாமி (65) என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேந்திரன் (40) மற்றும் ராம்குமார் (35) ஆகிய இரு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக பகுதியில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் ராமரை ராமசாமி மற்றும் அவருடைய மகன்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ராமர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த கொலை வழக்கில் ராமசாமி மற்றும் ராஜேந்திரன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு வழக்கில் தலைமறைவாக இருந்த ராம்குமாரை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்த நிலையில் அவர்கள் பெங்களூருவில் பதுங்கி இருப்பது தெரியவந்ததையடுத்து அவரை அங்கு சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது அவருடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியஷீலா (42) என்பவர் இருந்தார். இவர்கள் இருவரிடமும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது ராம்குமார் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம். இதை சத்தியசஷீலா தன்னுடைய செல்போனில் பார்த்த நிலையில் அவரிடம் தன் மனதை பறிகொடுத்துள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகாத நிலையில் காதலித்து வந்துள்ளனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக நடந்த கோவில் திருவிழாவில் ராம்குமார் உடன் சத்தியஷீலாவும் இருந்துள்ளார். மேலும் இதனால் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கருதி சத்திய ஷீலாவையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.