பெங்களூருவில் கடந்த 15 ஆண்டுகளாக பொய்யாக காவலராக நடித்துகொண்டு இளைஞர்கள் மற்றும் தம்பதிகளை மிரட்டி பணம் பறித்து வந்த ஆசிஃப் கான் என்ற நபர் (வயது 42) கடந்த வாரம் ஜெயநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். “பிஸ்டோ” என்ற அடைமொழியில் அறியப்படும் இவர், கங்காநகரைச் சேர்ந்தவர். இவர் பகுதி நேர ஆட்டோ ஓட்டுநராக இருந்துள்ளார். பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த பிறகு, காதலர்கள் பப்ளிக் இடங்களில் தனிமையில் இருப்பதை குறிவைத்து, காவலரின் வேடத்தில் அங்கு சென்று மிரட்டி பணம் பறிப்பதை தனது தொழிலாக மாற்றியுள்ளார்.

கடந்த மார்ச் 5-ம் தேதி ஆர்வி மெட்ரோ நிலையத்தின் அருகே ஒரு காரில் பெண் ஊழியர் ஒருவருடன் 41 வயது நபர் ஒருவர் இருந்துள்ளார். அப்போது அந்த இடத்திற்கு சென்ற ஆசிப் கான் அவர்களை மிரட்டியதோடு சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அதன் பிறகு அவர்களிடம் இருந்து 12 கிராம் தங்க சங்கிலி, 5 கிராம் தங்க மோதிரம் மற்றும் ஏடிஎம் மூலமாக ரூ.10,000 பணம் ஆகியவற்றை பறித்து விட்டு அங்கிருந்து சென்றார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் மறுநாள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தான் அவர் பல வருடமாக செய்து வந்த மோசடி வெளியே வந்தது.

இதை தொடர்ந்து கடந்த வாரம் அவரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டும் ஆசிப் கைது செய்யப்பட்டு மீண்டும் பிணையில் வெளியே வந்தது தெரிய வந்துள்ளது. ஜாமீனில் வெளியே வந்த பிறகும் அவர் தொடர்ந்து இது போன்ற மோசடியில் ஈடுபட்டு வந்த நிலையில் கிட்டத்தட்ட 19-க்கும் மேற்பட்ட புகார்கள் அவர் மீது குவிந்துள்ளது. மேலும் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.