கேரளா ஆலப்புழாவில் தாமஸ் ஜோசப் (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தானில் கேட்டரிங் படித்து வருகிறார். அதேபோன்று கேரளாவை சேர்ந்த டோனா ஜோஜி (22) என்ற பெண் அங்கு தடை அறிவியல் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஜோஜி, ஜோசப்புடன் உறவிலிருந்து கருத்தரித்துள்ளார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதால் அதை வெளியே சொல்லாமல் மறைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி ஜோஜிக்கு பிரசவ வலி வந்து, குழந்தை பிறந்துள்ளது.

உடனடியாக ஜோஜியே குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியுள்ளார். மற்றொருபுறம் குழந்தை அழாமல் இருந்ததால், குழந்தை இறந்து விட்டது என்று தனது காதலனிடம் கூறியுள்ளார். இதையடுத்து ஜோசப்பும், அவரது நண்பன் அசோக்குடன் (24) ஜோஜி வீட்டுக்குச் சென்றனர். அதன் பிறகு அந்த குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து 2 நாட்களுக்குப் பிறகு ஜோஜிக்கு பயங்கரமான வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சென்ற அவரின் உடல் மாற்றங்கள் மற்றும் அவரின் நடத்தைகளை சந்தேகப்பட்ட மருத்துவர் பெற்றோர் வந்தால் தான் சிகிச்சை எனக் கூறியுள்ளனர். உடனே ஜோஜி  உண்மைகளை கூறினார்.

இதுகுறித்து மருத்துவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் ஜோஜிடம் நடத்திய விசாரணையில், அவர் குழந்தையை ஜோசப்பிடம் கொடுத்து ஆதரவற்ற குழந்தைகள்  இல்லத்தில் விடச் சொன்னதாக கூறினார். பின்பு ஜோசப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தை இறந்ததால், அதை ஆளில்லா பகுதியில் புதைத்து விட்டதாக கூறினார். இதனால் காவல்துறையினர் தற்போது ஜோசப் மற்றும் அசோக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜோஜி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.