
அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் பகுதியில் அருமைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம் குமார் (21) என்ற மகன் இருக்கிறார். இந்த வாலிபர் டிப்ளமோ மெக்கானிக் படித்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டதால் அவருடைய காதலி சில நாட்களாக பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை அந்தப் பெண் ஊருக்கு செல்வதற்காக நரசிங்கப்பாளையம் காலனி பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது ஜெயங்கொண்டம் நோக்கி செல்லும் ஒரு அரசு பேருந்து வந்த நிலையில் அந்த பேருந்தில் பெண் ஏறினார்.
அந்த பேருந்து அங்கிருந்து கிளம்பிய நிலையில் பேருந்தை நிறுத்துவதற்காக பிரேம்குமார் திடீரென பெட்ரோல் குண்டை வீசினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் பேருந்தை நிறுத்தியதால் அந்த குண்டு சாலையில் விழுந்து தீப்பிடித்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுனர் மீன்சுருட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேம்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.