
சேலம் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டனூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பவித்ரா(23) நர்சாக இருக்கிறார். கடந்த மே மாதம் 22-ஆம் தேதி பவித்ராவுக்கும் அவரது காதலர் மோகன் ராஜுகும் திருமணம் நடைபெற்றது. இருவரும் சென்னையில் வீடு எடுத்து தங்கி இருந்தனர். தற்போது பவித்ரா கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் மோகன்ராஜ் தனது தங்கைக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக ஓமலூருக்கு சென்றார். அதன்பிறகு பவித்ராவை பார்க்க சொல்லவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பவித்ரா தனது கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. உடனடியாக பவித்ரா வேலுகவுண்டனூரில் இருக்கும் தனது கணவரின் வீட்டிற்கு சென்று தன்னையும் சேர்த்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு 100 பவுன் தங்க நகை, 10 லட்சம் ரூபாய் பணம் கொண்டு வந்தால் தான் மோகன் ராஜுடன் குடும்பம் நடத்த முடியும் என அவர்கள் கூறியதாக தெரிகிறது. மேலும் அவர்கள் பவித்ராவை அவதூறாக பேசியுள்ளனர்.
இதுகுறித்து பவித்ரா ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மோகன்ராஜ் உள்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் மோகன் ராஜை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு அவரது வீட்டிற்கு முன்பு பவித்ரா போராட்டம் நடத்தி வருகிறார். நேற்று இரண்டாவது நாளாக போராட்டம் நீடித்தது. அவருடன் உறவினர்கள் தங்கி இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.