கன்னியாகுமரி மாவட்டம் மாறங்கோணம் பகுதியில் ராஜேந்திரன் (34) என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்க்கும் நிலையில் மெர்லின் சீதா (30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கும் நிலையில், ராஜேந்திரனுடன் வேலை பார்க்கும் ரீகன் ஜோய் (30) என்பவர் அடிக்கடி அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கும் மெர்லினுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது தொடர்பாக கணவருக்கு தெரிய வந்த நிலையில் அவர் ரீகனுடன் ஆன நட்பை துண்டித்தார்.

அதன் பிறகு ஒரு கட்டத்தில் தன்னுடைய கணவரை பிரிந்த மெர்லின் ரீகனுடன் சென்றுவிட்டார். இவர்கள் இருவரும் கடந்த ஒன்றறை வருடங்களாக குடும்பம் நடத்தி வரும் நிலையில், ராஜேந்திரன் தனிமையில் தவித்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் ராஜேந்திரன் பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போது தன் மனைவி மற்றும் ரீகனை ஒன்றாக பார்த்தார். அப்போது அவர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி அவர்களிடம் சென்று நியாயம் கேட்ட  நிலையில் இவரை உயிருடன் விட்டால் நம்மை வாழ விட மாட்டார் என்று ரீகனிடம் மெர்லின் கூறினார்.

உடனடியாக தான் வைத்திருந்த கத்தியால் ரீகன் ராஜேந்திரனை  குத்தினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த நிலையில் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். இதில் மெர்லின் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் கேரளாவுக்கு தப்பிச்செல்ல ரயில்வே ஸ்டேஷனில் நின்ற ரீகனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர்களை காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.