உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி ரோடு காவல் நிலைய எல்லைக்குள் ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது மகள் காதலனை திருமணம் செய்துக் கொண்டதால் மனவேதனையில் ஒரு தந்தை தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரைமாய்த்துக் கொண்டார். இதனால் கோபமடைந்த அந்தத் தந்தையின் உறவினர்கள், அந்தப் பெண்ணின் மாமனாரை வீதியில் இழுத்து வெளியே கொண்டு வந்து சுத்தி நின்று தாக்கினர், இவர்கள்  தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

 

இது குறித்து போலீசார் கூறும்போது, நாகா சந்திரவத்னி பகுதியில் வசித்து வந்த ரிஷிராஜ் ஜெய்ஸ்வால் என்ற நபர் தனது வீட்டில் தனியாக இருந்த போது, தன்னுடைய உரிமம் பெற்ற துப்பாக்கியால் தன்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது மகள் ஹர்ஷிதா, 15 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி காதலன் ஆனந்த் பிரஜாபதியுடன் சென்று கோர்ட்டில் திருமணம் செய்துகொண்டதாகவும், பின்னர் போலீசார் அவளைக் கண்டு பிடித்து மீட்ட பிறகும் நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் கணவனுடன் வாழ அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் அந்தப் பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டதால் கோபத்தில் இளம் பெண்ணின் உறவினர்கள் அவர் திருமணம் செய்து கொண்ட ஆணின் தந்தையை வீட்டில் இருந்து வெளியே இழுத்து போட்டு அடித்து தாக்கியுள்ளனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.