கடலூர் மாவட்டம் வேம்பூர் அடுத்த லட்சுமணபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சக்திவேல் என்பவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஸ்வேதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு வருடங்களாக குழந்தை இல்லை. இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த நயினார் பாளையம் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

அந்தப் பகுதியில் உள்ள ஏரிகளில் பொக்லைன் இயந்திரம் மூலமாக மண் அள்ளும் வேலையை சக்திவேல் செய்து வந்துள்ளார்.  வழக்கம்போல கணவன் மனைவி இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த சக்திவேல் ஸ்வேதாவை தாக்கியதில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் அம்பலம் கிராம ஏரியில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மனைவியின் உடலை புதைத்துள்ளார்.

அதன் பிறகு ஸ்வேதாவின் உறவினருக்கு இந்த தகவலை சொல்லிவிட்டு சக்திவேல் அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.