மும்பை போல்வை பகுதியில் உள்ள ஜல்வாயு விஹார் ஹவுசிங் சொசைட்டியில் மார்ச் 22 ஆம் தேதி ஒரு சோகமான சம்பவம் நடந்தது. 37 வயதுடைய ஒரு பெண் விஞ்ஞானி, இரு நாய்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். ஒரு பிட் புல், டோபர்மான் நாய்கள் காரிலிருந்து இறங்கி, கட்டுப்பாடின்றி பெண்ணை தாக்கின. தாக்குதலில் அவரது முகத்தில் 20 தையல்கள் போடப்பட்டது. மேலும் மூக்கு முற்றிலும் சேதமடைந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உருவானது.

தாக்கப்பட்ட பெண் கூறியதாவது, “நான் என் குடியிருப்பு வளாகத்துக்குள் நின்று கொண்டிருந்தபோது, ஒரு காரில் இருந்து இரண்டு நாய்கள் இறங்கின. பிட் புல் கயிறில் கட்டப்பட்டிருந்தாலும், டோபர்மான் கட்டப்பட்டிருந்ததா என ஞாபகம் இல்லை.” என்றார். எதிர்பாராதவிதமாக பிட் புல் நாய் நேராக அவரை நோக்கி பாய்ந்ததாகவும், அதை விரட்ட முயன்ற போதும், டோபர்மான் வந்து என்னை தரையில் தள்ளியது.

பிட் புல் என் மூக்கை கடித்து குதறியது. நான் கத்திக்கொண்டிருந்தேன், ஆனால் எவரும் உதவ வரவில்லை,” என அவர் வலியோடு கூறினார். பின்னர் சில குடியிருப்பு வாசிகள் ஓடி வந்து நாய்களை பிடித்துள்ளனர். ரத்தம் வடிந்த நிலையில், அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த பெண்ணின் கணவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி.  அவர் தனது மனைவியின் மூக்கு சிதைந்ததால், nose reconstruction அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து போல்வை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாய் உரிமையாளர் திவேஷ் விர்க், ஓட்டுநர் அதுல் சாவந்த் மற்றும் உதவியாளர் ஸ்வாதி ஆகியோரிடம் இந்திய தண்டனைச் சட்டம் 291 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. “பொதுமக்கள் இடத்தில் நாய்களை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் மூத்தவர்கள் பாதுகாப்பாக இருக்க, நாய்களின் உரிமையாளர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்,” என பாதிக்கப்பட்ட பெண் வலியுறுத்தியுள்ளார்.