
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை என்ற இடத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு தற்போது அந்தப் பகுதியில் பந்தல் அமைக்கும் பணிகள் மற்றும் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு தற்போது யாரையும் அனுமதிக்காததோடு பாதுகாப்புக்காக பவுன்சர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் மாநாட்டிற்கு இலட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு ஊர்களில் இருந்தும் தொண்டர்களும் ரசிகர்களும் வருவார்கள் என்பதால் பார்க்கிங் வசதி உட்பட அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முன்னதாக விக்கிரவாண்டி பகுதியில் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு சுவர் விளம்பரங்கள் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் தற்போது மாநாடு நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் குறித்த புகைப்படம் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது கர்மவீரர் காமராஜர், பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியோர்களின் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனுடன் நடிகர் விஜயின் கட்டவுட்டும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த புகைப்படம் தற்போது மிகவும் வைரலாகி வரும் நிலையில் நடிகர் விஜயின் கட்சி கொள்கை என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.