
நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி திறனில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக மத்திய மின்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் காற்றாலைகளில் இருந்து மே முதல் செப்டம்பர் மாதம் வரை தினமும் சராசரியாக 2500 மெகா வாட்டும்,சூரிய சக்தி மின் நிலையங்களில் இருந்து மழை இல்லாத நாட்களில் தினமும் பகலில் 3000 மெகா வாட்டிற்கு மேலும் மின்சாரம் கிடைக்கின்றது. தமிழக மின்வாரியம் முந்தைய காலங்களைப் போல இல்லாமல் தற்போது காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுவதும் பயன்படுத்தி வருகின்றது.
இதனை தொடர்ந்து இந்த வருடம் ஜனவரி 31ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் நிலையங்களின் உற்பத்தி திறன் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம் 9,964 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திறனுடன் முதல் இடத்தில் இருக்கின்றது. அதனைப் போலவே சூரிய சக்தி மின் உற்பத்தி திறனிலும் தமிழகம் நான்காவது இடத்தில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.