
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருவதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது. இதன் காரணமாக கொள்முதல் செய்யும் விலையிலேயே பொது மக்களுக்கு தக்காளியை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தற்போது கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி பசுமை பண்ணை கடைகளில் தக்காளியை விற்பனை செய்ய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். அங்கு ஒரு கிலோ ரூ.61 முதல் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு சென்னையில் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை மற்றும் தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் ரேஷன் கடைகள் மூலமாகவும், அம்மா உணவகங்களுக்கு பசுமை பண்ணை கடை ஊழியர்கள் மூலமாகவும் விநியோகம் செய்ய முடிவெடுத்துள்ளனர். மேலும் 62 பசுமை பண்ணை கடைகள் மற்றும் 3 நகரும் பசுமை பண்ணை கடைகள் மூலமாக விற்பனை செய்யப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.