நீலகிரி குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து  57 சுற்றுலா பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையோர 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் 8 பேர்உயிரிழந்துள்ளனர்.மேலும் விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிக்கிய பயணிகளில் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் நிதின், பேபி கலா, முருகேசன், முப்பிடாதி, கௌசல்யா, இளங்கோ, ஜெயா, தங்கம் ஆகிய 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீலகிரி விபத்து குறித்து அறிந்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் :

இதற்கிடையே நீலகிரி குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்காசி மாவட்டத்திலிருந்து உதகமண்டலத்திற்கு தனியார் பேருந்து மூலம் சுற்றுலாவிற்கு சென்றவர்கள் இன்று (30.9.2023) தென்காசிக்கு திரும்பும் வழியில் சுற்றுலா பேருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியாறு அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்த ஏற்பட்ட விபத்தில் பேருந்தில் பயணம் செய்த திருமதி. முப்புடாதி (வயது 67) திரு.முருகேசன் (வயது 65) திரு. இளங்கோ (வயது 64) திருமதி. தேவி கலா (வயது 42) திருமதி. கௌசல்யா (வயது 29) மற்றும் செல்வன். நிதின் (வயது 15) ஆகியோர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கா ராமச்சந்திரன் அவர்களை விபத்து நடந்த இடத்தில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்தவும், மேலும் இவ்விபத்தில் படுகாயம் மற்றும் லேசான காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கும் அறிவுறுத்தி உள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.