சிலி நாட்டைச் சேர்ந்த எக்ஸிகுவல் ஹினோஜோசா என்பவர் தனது வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது தனது தந்தைக்கு சொந்தமான 60 ஆண்டுகள் பழமையான வங்கி பாஸ்புக் கிடைத்தது. அந்த வங்கி கணக்கு பற்றி எக்ஸிகுவலின் தந்தைக்கு மட்டுமே தெரியும். அவரது தந்தையும் 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். கடந்த 1960 முதல் 70 ஆம் ஆண்டுக்குள் வீடு வாங்குவதற்காக எக்ஸிகுவலின் தந்தை வங்கியில் 1.40 லட்சம் pesos( சிலி கரன்சி) வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட வங்கி நீண்ட காலத்திற்கு முன்பு மூடப்பட்டது.

அந்த பாஸ்புக்கில் இடம்பெற்றிருந்த அரசு உத்தரவாதம் என்ற வார்த்தையை எக்ஸிகுவல் கவனித்தார். உடனே அரசை அணுகினார். ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால் அரசு மீது வழக்கு தொடர்ந்து தனது தந்தை உழைத்து சம்பாதித்த பணம் வேண்டும் என நீதிமன்றத்தில் வாதிட்டார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வட்டியுடன் சேர்த்து 1.2 மில்லியன் டாலர்கள் (சுமார் 10 கோடி ரூபாய்) திருப்பிக் கொடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு குறித்து இப்போது வரை வேறு எந்த தகவலும் தெரியவில்லை. எக்ஸிகுவலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அவருக்கு 10 கோடி ரூபாய் கிடைக்கும். இந்த நிகழ்வு பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.