
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகிறார்கள். சமீபத்தில் 50 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்த நிலையில் நேற்று மீண்டும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி மீண்டும் மீனவர்களை கைது செய்தனர். இதனால் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி அனுப்பினார்.
இந்நிலையில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டதாக தற்போது அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு மீனவர்கள் கைது செய்யப்படுவதும் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும் தொடர்கதையாகிவிட்டது. திமுக அரசு கும்பகர்ண அரசாக மாறிவிட்டது. ஒரு கும்பகர்ண அரசு போன்று யார் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறது. மேலும் இதன் காரணமாக அனைவரும் போராட்டும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர் என்று கூறினார்.