
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே தவுட்டுகுளம் பகுதி உள்ளது. இங்கு சாலையோரம் ஒரு குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் 10 வயது சிறுமி ஒருவர் நேற்று காலை குளித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு லாரி அங்கு வந்தது. அந்த லாரியை ஓட்டுனர் நிறுத்திவிட்டு கீழே இறங்கி தண்ணீர் பிடிக்க வந்தார். அப்போது அவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு சிறுமியை கடத்தி செல்ல முயன்றார். இதைப் பார்த்த சிறுமியின் உறவுக்கார பெண் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தினார். அப்போது அந்த பெண்ணிடமும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு ஆபாசமான முறையில் பேசி சிறுமியை கீழே இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றார்.
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் பெண்ணிடம் விசாரித்தனர். பின்னர் அந்த வாலிபர்கள் லாரி ஓட்டுநரை அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை வைத்து தேடினர். இந்நிலையில் நேற்று மாலை அந்த லாரி ஓட்டுநரை வாலிபர்கள் பிடித்தனர். அவருக்கு தர்ம அடி கொடுத்து மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றி கோட்டகுப்பம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் முருகன் என்பது தெரியவந்தது. மேலும் அவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானது. இதைத்தொடர்ந்து அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.