
சேலம் மாவட்டம் அரசு மருத்துவமனை கல்லூரி அருகே ஒரு காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் தலைமை காவலராக கோவிந்தராஜ் (38) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சங்கீதா (27) என்ற மனைவியும், ரோகித் (8), தர்ஷினி (4) என்ற குழந்தைகளும் இருந்துள்ளனர். இதில் ரோகித் 3-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் தர்ஷினி எல்கேஜி படித்து வந்துள்ளார். இவர்கள் குடும்பத்தோடு காவலர் குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் கோவிந்தராஜ் மற்றும் சங்கீதா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு கோவிந்தராஜ் வீட்டில் இல்லை. பின்னர் அவர் வீட்டிற்கு வந்தபோது சங்கீதா தூக்கில் பிணமாக தொங்கினார். குழந்தைகள் இருவரும் வீட்டில் பிணமாக கிடந்தனர். அதாவது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து சங்கீதா கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பத் தகராறில் மனம் உடைந்து சங்கீதா இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.