பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மகேஷ் குமார் இவருக்கு அஞ்சலி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கோவை மாவட்டத்திலுள்ள சூலூர் அருகே அமைந்திருக்கும் அப்ப நாயக்கன் பட்டியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இந்த தம்பதியினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை என 2 குழந்தைகளை கடத்தி கோவை மற்றும் ஆந்திராவைச் சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

அதன் பேரில் சூலூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் தீவிர விசாரணை நடத்த கோவை கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் பேரில் குழந்தைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டனர் வாங்கியவர்கள் யார் என தனிப்படை துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் ஒரு குழந்தையை வாங்கியவர் திம்ம நாயக்கன் பாளையத்தை சேர்ந்த விஜயன் என்பது தெரியவந்தது.

ஆகவே காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவருக்கும் அவரது மனைவிக்கும் குழந்தை இல்லை என்பதை தெரிந்து கொண்ட மகேஷ் குமார் சட்டப்படி குழந்தையை தத்து கொடுப்பது போல் ஒரு தம்பதியினரிடமிருந்து வாங்கி கொடுப்பதாக கூறி போலியான ஆவணங்களை தயாரித்து 2 1/2 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இருப்பினும் சட்ட விரோதமாக விஜயன் குழந்தையை வாங்கியதால் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த குழந்தை கடத்தல் சம்பவத்தில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.