சேலம் மாவட்டத்தில் உள்ள புத்திர கவுண்டம்பாளையம் ஊராட்சி ஆறாவது வார்டு பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நில தரகராக உள்ளார். இவரது தம்பி மகன் செல்வராஜ் பிஎஸ்சி படித்து முடித்து கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பணம் வாங்கி மது குடித்துள்ளார். நேற்று முன்தினம் செல்வராஜ் பெரியசாமியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டார். ஆனால் பெரியசாமி பணம் கொடுக்க மறுத்து செல்வராஜை கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது திடீரென செல்வராஜ் வீட்டில் இருந்த கத்தியால் பெரியசாமியின் தலையை கொடூரமாக அறுத்து துண்டித்தார். இதனால் ரத்த வெள்ளத்திலேயே பெரியசாமி உயிரிழந்தார். அதன்பிறகு ஒன்றும் தெரியாதது போல செல்வராஜ் பெரியசாமியின் உடலுக்கு அருகே உட்கார்ந்திருந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெரியசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.