விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி கலைஞர் குடியிருப்பில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் முனீஸ்வரி என்ற பெண்ணை காதலித்தார். இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 8,6,2 வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பொன்னுசாமி தனது மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி தாக்கியுள்ளார். நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த பொன்னுசாமி உலக்கையால் தனது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் மயங்கி விழுந்த மாரீஸ்வரி மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்துள்ளார். அப்போது அம்மாவின் உடலில் தீப்பற்றி எரிவதை பார்த்த குழந்தைகள் அலறி சத்தம் போட்டனர். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததும் பொன்னுசாமி தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முனீஸ்வரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பொன்னுசாமி தனது மனைவியை கொலை செய்து நாடகமாடியது உறுதியானது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.