கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் கடந்த 29ஆம் தேதி பெய்த கனமழையின் காரணமாக சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வரும் நிலையில் 200-க்கும் மேற்பட்டோர் மாயமானதாக கூறப்படுவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தடையை நீக்கி முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது மீட்பு பணியில் ராணுவத்துடன் இஸ்ரோ விஞ்ஞானிகளும் கைகோர்த்துள்ளனர். இது தொடர்பாக இஸ்ரோ நடத்திய ஆய்வில் மண் ஆரம்ப புள்ளியில் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக 86,000 சதுர அடி வரை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து தற்போது மீட்பு பணிகள் என்பது துரிதமாக நடைபெற்று வருகிறது.