யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்..

2015 ஆம் ஆண்டு ஓமலூர் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை நாமக்கல் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கோகுல்ராஜ் மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்டார். இந்த சம்பவத்தில் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

குறிப்பாக யுவராஜ், அருண் குமார் என்ற சிவக்குமார், சங்கர், அருள், செந்தில், செல்வகுமார், அமுதரசு, சந்திரசேகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் இரண்டு பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு முதலில் நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதன் பிறகு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. யுவராஜ் மற்றும் அவரது கார் ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேருக்கு சாகும் வரை மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எஞ்சியவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனைக்கு எதிராக யுவராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். அந்த வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ்,  ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் வாசித்தனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டை உலுக்கிய கோகுல்ராஜ்  கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என உறுதி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆயுள் தண்டனையை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஆணவக் கொலை நிரூபிக்கப்பட்டதால் அவர்களின் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகி உள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்பட்ட உத்தரவும் சரியே என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. வழக்கிலிருந்து 5 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல் ராஜின் தாயும் மேல்முறையீடு செய்திருந்தார்.

மதுரை சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். அதன்படி யுவராஜ், அருண், குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், சந்திரசேகரன், செல்வராஜ், பிரபு, கிரிதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது