திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி என்னும் பகுதியில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோவிலில் திருவிழாவுக்கு முன்பு அம்மனை ஊர்வலம் கொண்டு வருவது வழக்கம். அதேபோல் ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திருவிழாவை சிறப்பிக்க இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென காமராஜபுரத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும் வி.எஸ்.கே காலனி பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தகராறு முற்றிய நிலையில் காமராஜர் புரத்தைச் சேர்ந்த சந்துரு என்பவரை சிலர் கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில் படுகாயம் காயமடைந்த சந்துருவை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கி வந்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காரணமாக காமராஜபுரத்தைச் சேர்ந்த மக்கள் வி.எஸ்.கே காலனி பகுதிக்கு சென்று அங்குள்ள இருசக்கர வாகனம், ஆட்டோ போன்றவற்றை அடித்து நொறுக்கினர். அதன்பின் காமராஜர் புரத்தைச் சேர்ந்த அனைத்து பொதுமக்களும் எம்ஜிஆர் சாலையில் அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்ததுடன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் அதிகமான மக்கள் ஈடுபட்டு இருந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தனர். மேலும் காவல்துறையினர் இச்சம்பவத்தை பற்றி விசாரணை நடத்தியதுடன் சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.