இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறார்கள். இந்த போட்டி ஜூலை 27ஆம் தேதி தொடங்கும் நிலையில் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், டி20 கேப்டன் ஆக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு டி20 மற்றும் ஒரு நாள் போட்டி என இரு போட்டிகளிலும் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் பல இந்திய வீரர்கள் இடம்பெறாதது ‌ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக பலரும் தேர்வு குழுவினரை விமர்சித்து வருகிறார்கள்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் தேர்வு குழுவினரை விமர்சித்து ஒரு எக்ஸ் பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், இந்த மாதம் இலங்கைக்கு செல்லும் இந்திய அணியினரின் தேர்வு ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில் கடைசி ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த சஞ்சு சாம்சன் ஒரு நாள் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதன் பிறகு ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் சதம் அடித்த அபிஷேக் சர்மாவுக்கு இடமே கிடைக்கவில்லை. சில வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும் அது தேர்வர்களுக்கு மிக குறைவாகவே தெரிகிறது. அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவுக்கு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.