
ஆந்திரா துணை முதல்வரான பவன் கல்யாண் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சனாதன தர்மத்தை பாதுகாப்பதற்காக ஜனசேனா கட்சிக்குள் நரசிம்ம வாராஹி படை என்ற புதிய அணியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக பவன் கல்யாண் கூறியதாவது, இந்து கோவில்களுக்கு செல்லும்போது சனாதன தர்மத்தை பின்பற்றும்போது சில விஷயங்களை நாம் கடைபிடிக்க வேண்டியது.
அவசியம் சனாதன தர்மம் நாட்டிற்கு மட்டுமின்றி உலகிற்கே வழிகாட்டும் விளக்காக உள்ளது. சனாதான தர்மம் இல்லாமல் நம் நாடு இல்லை என்று ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை மதிக்கிறோம். அதேசமயம் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் எந்த ஒரு செயலுக்கும் விளைவுகள் ஏற்படும் என்பதை உறுதி செய்வோம். சமூக வலைதளங்களில் இந்து மதத்தையோ சனாதன தர்மத்தையோ கேலி செய்யும் வகையில் வெளியிடப்படும் பதிவுகளை பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
சமூக வலைதளங்களில் சனாதனம் பற்றி விமர்சிப்பவர்கள் கடுமையான விளைவை சந்திப்பார்கள். நரசிம்ம வாராஹி படையில் ஜனசேனாணி என்று அழைக்கப்படும் ஜனசேனா உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் சனாதன தர்மத்திற்காக அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். இந்த புதிய பிரிவு ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் இந்து மத விழுமியங்களை பாதுகாப்பதற்கான கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் எனக் கூறியுள்ளார்.