
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்திய மக்களும் கண்டிப்பாக பதிலடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிடென்சி பிராண்டு என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் அரசு இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் தற்போது இந்தியா சர்ஜிகல்ஸ் ஸ்ட்ரைக் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பதிலடி கொடுத்து தாக்குதல் நடத்தியது. இதேபோன்று தற்போதும் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பதிலடி கொடுக்கும். இந்த வகை தாக்குதல் இலக்கை மட்டும் குறி வைத்து ராணுவம் கொடுக்கும் பதிலடி ஆகும்.
ஏற்கனவே பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று நேற்று கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் இந்தியா வருவதற்கும் தடை விதிக்கப்பட்டு அவர்களின் விசாக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு சிந்துநதி ஒப்பந்தத்தையும் ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்தியா எந்த நேரத்திலும் சர்ஜிகல்ஸ் ஸ்ட்ரைக் மேற்கொள்ளும் என்பதால் தற்போது பாகிஸ்தான் ராணுவத்தை தயாராக வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.