
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அருகே புதுக்குடி பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கிட்டத்தட்ட 103 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் பள்ளியில் 4 ஆசிரியர்கள் உட்பட தலைமை ஆசிரியர் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பள்ளி நேரத்தில் 7ஆம் வகுப்பு படிக்கும் யாழினி என்ற மாணவி தனது சக தோழிகளுடன் அருகில் உள்ள கன்மாயில் குளிக்க சென்ற போது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உடன் சென்ற பிற தோழிகள் இருவரும் மீட்கப்பட்டனர். இச்சம்பவத்தை அடுத்து மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் பாட வேளையில் மாணவி உயிரிழந்ததால் கவனக்குறைவாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் சுமதியை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து தலைமை ஆசிரியர் சஸ்பெண்டை ரத்து செய்யக்கோரி பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு தங்களது பெற்றோர்களுடன் பள்ளிக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் சேதுராமன் சம்பவ இடத்திற்குச் சென்று மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் இது குறித்து உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாணவர்களின் கோரிக்கை பரிசீலனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு உறுதியளித்தார். அதன் பின் மாணவ மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.