
மும்பை பாண்ட்ரா பகுதியில் நடந்த ஒரு அச்சுறுத்தும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாகி வருகிறது. சனிக்கிழமை மாலை 7 மணியளவில், ஒரு பெண் ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்த போது, சட்டை அணியாத நிலையில் மது போதையில் இருந்த ஒருவர், சிக்னலில் நின்றிருந்த ஆட்டோவுக்கு அருகே வந்து உணவு கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
பெண் அவரை புறக்கணித்ததையடுத்து, அவர் திடீரென ஆட்டோவில் கையை நுழைத்து, அந்த பெண்ணை தவறாக தொட்டு“உணவு தா, இந்த உடை தான் காரணம்” எனக் கூறியதோடு, “இந்தியா தான் இது… உன்னை நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” எனக் கூச்சலிட்டதாகத் தெரிவித்தார்.
View this post on Instagram
இந்த சம்பவத்தை அந்த பெண் தனது மொபைலில் பதிவு செய்து, X (முன்னர் Twitter) தளத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். வீடியோவில், அந்த நபர் சாலையோரத்தில் சத்தமிட்டு பேசுவதும், சாலையில் துப்புவதும், மோசமாக நடந்து கொள்வதும் தெளிவாக காணப்படுகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் உடனே மும்பை போலீசை டாக் செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். மும்பை போலீசார் 12 மணி நேரம் கழித்து பதிலளித்து, “உங்களை பின்தொடர்கிறோம், தயவுசெய்து உங்கள் தொடர்பு விவரங்களை டைரக்ட் மெசேஜில் (DM) பகிரவும்” என பதிலளித்தனர்.
அந்த பெண் அந்த பதிலை ஒப்புக்கொண்டு, தனது விவரங்களை போலீசாருக்கு அனுப்பியதாக உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம், மக்கள் நடமாட்டம் அதிகமான மும்பை நகரிலும் பெண்கள் பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.