சத்தீஸ்கர் மாநிலத்தில் கல்யாண்பூர் என்ற பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரை காணவில்லை என்று இவரது தந்தை ராம்கிலாவன் சாஹு என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து காணாமல் போன பெண்ணை தேடி வந்தனர். இதற்கிடையில் தொழில்நுட்ப சான்றுகள் மற்றும் செல்போன் அழைப்பு பதிவு விவரங்கள் வைத்து 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்கள் லுகேஷ் சாஹு (29) மற்றும் ராஜாராம் சாஹு (26) என்பது தெரிய வந்தது. இதில் லுகேஷ் அந்தப் பெண்ணின் முன்னாள் கணவர் ஆவார். இவர் அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கிறது என்று சந்தேகப்பட்டு 3 வருடங்களுக்கு முன்பு அவரை பிரிந்து சென்றுவிட்டார். இருப்பினும் கோர்ட்டின் உத்தரவுப்படி அவரது 3 குழந்தைகளுக்கும் மற்றும் அந்த பெண்ணுக்கு பராமரிப்பு தொகை கொடுத்து வந்துள்ளார். அந்த பெண் ராஜாராம் உடன் தொடர்பில் இருந்துள்ளார். எனினும் தொடர்ந்து பணம் கேட்டதால் ராஜாராம் கோபம் அடைந்துள்ளார்.

அதோடு 1 1/2 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளதாகவும், கடையிலிருந்து எலக்ட்ரானிக் பொருட்களை கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். ராஜாராம் மற்றும் லுகேஷ் நன்கு அறிமுகமானவர்கள். அதனால் அந்த பெண்ணிடம் இருந்து விலகி இருக்க முடிவு செய்ததோடு,  அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதற்காக இருவரும் திரிஷ்யம் படம் பார்த்துள்ளனர். அதன் மூலம் பெண்ணின் உடலை மறைக்கவும், காவல் துறையினர்  நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவும் படத்திலிருந்து சில விஷயங்களை கற்றுக் கொண்டனர். அதன் பின் இருவரும் சேர்ந்து பெண்ணை கொலை செய்துவிட்டு வனப்பகுதியில் புதைத்து விட்டு சென்றது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.